Monday, June 8, 2009

காயத்தின் குருரம்சூழலின் வெளியில் தொலைத்த
எனது உணர்வலை
எப்போதாவ‌து என் சுவாசக்கிற்றை
க‌ட‌ந்து செல்கையில் ப‌ர‌வும் ப‌ர‌வ‌ச‌ம்
வார்த்தைக்குள் மட்டும் வ‌ருவ‌தேயில்லை
நாட்ப‌ட்ட‌ என‌து காய‌த்தை
குருதிக‌ல‌ந்த‌ ம‌ருந்துக‌ள் கூட‌
சீண்ட‌ ம‌றுக்கின்ற‌ன‌

என் புகைத்தலின் ஒரு பொழுதில்
க‌ட‌ந்த‌ என் ந‌ண்ப‌னின் முக‌த்தில்
என் காய‌த்தின் சீழ் வ‌டிவதை
சிரித்து ம‌றைக்க‌ முயன்ற‌தை
நானும் சிரித்து ம‌றைத்தேன்

ப‌ரஸ்ப‌ர‌ம் இர‌த்த‌க்க‌ரை ப‌டிந்த‌
ப‌ற்க‌ளை ப‌ரிமாறிய‌ப‌டி
ம‌துவிடுதியின் இரைச்சலை
அதிகப்படுத்தி வெளியில் பார்க்கையில்
அனைவரின் முகத்திலும்
எனது காயத்தின் குருரம்

Thursday, June 4, 2009

மௌனம் சூழ்ந்த உறவு (போட்டிச்சிறுகதை)

இன்றோடு அவனிடம் பேசி இரண்டு நாளாவது இருக்கும். அலைபேசி விடாமல் கதறிக் கொண்டே இருந்த்து. எடுப்பதா வேண்டாமா? என்ற யோசனைக்கு நடுவில் அலைபேசி கதறி அணைந்து அவ்விடமெங்கும் நிசப்தம் சூழ்ந்தது.மின் விசிறியை பார்த்தபடியே அவனின் நினைவுகள் என்னைச் சுழன்றபடியே இருந்த்து. முன்று மாததிற்கு முன்பு ஒரு நோயாளியாக எனக்கு அறிமுகமானான். இயல்பாய் பல நாள் பழகிய நட்புணர்வுடனான அவனது பேச்சு இந்த் துறைக்கு புதிது என்பாதல் எனக்கு ஆச்சிரியத்தை அளித்து.அவனது பேச்சும் அவனது நடத்தையும் விசித்திரமாய் வசிகரிக்ககூடியதாய் இருந்த்து..

அவனிடம் அவனது மருத்துவ சான்றிதலை அளித்து உங்களுக்கு ஹை.ஐ.வி தொற்று இல்லை என்று சொன்னேன். வழக்கமான இந்த மாதிரியான நோயாளிகளிடம் காணப்படும் விடுபட்ட உண்ர்வுடன் கூடிய மின்னும் கண்களிடம் வெளிப்படும் மகிழ்ச்சியும் நன்றி நவிழ்தல்களுமாய் அவனும் விடைபெற்றான். அன்று மாலையே மறுபடியும் அலைபேசியில் அழைத்தான்.

சிலரை நாம் சந்திக்கும் அந்த கணத்திலே ஏற்படும் நட்புணர்வு அவனிடம் இயல்பாய் வெளிபட்டது. அலைபேசி வழியாய் பேசிக்கொண்டோம் கிட்டத்தட்ட தினமும் பேசிக்கொண்டோம். குடும்பம், நண்பர்கள், திரைப்படம். கிசுகிசு. இலக்கியம் என அவன் சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டே இருந்தான். பல முறை முயற்சித்தும் இருவருக்குமான வேலை நேர அவலத்தால் சந்திக்கவே முடியவில்லை.


இந்த வார இறுதியில் எப்படியும் சந்திப்பது என்ற முடிவில் இருவரும் ஒரு ஞாயிறு ப‌க‌ல் உண‌வு வேலையில் ஒரு உண‌வு விடுதியில் ச‌ந்தித்துக்கொண்டோம். எங்களது சுவாரஸ்யமான பேச்சுக்கு நடுவில் எனது அலைபேசி கதறியது அம்மாட்ட இருந்து போன் என்று சொல்லியபடி அம்மாவிடம் பேசித்துவங்கினேன் வழக்கமான அம்மாவாய் அவளும் சராசரி மேன்சன் வாசியாக நானும் பேசித்தீர்த்தோம். என்னைப்
பார்த்து கொண்டே இருந்த அவனிடன் ’என்னடா அச்சு உனக்கு முறைக்கிற’ என்ற படி எனக்கான இருக்கையில் அமர்ந்தேன்.. அவனும் நீண்ட யோசனைக்குபின் அவன் ’அம்மாண்னா ரொம்ப புடிக்குமா?’ என்றான்
’என்னடா கேள்வி இது’ என்றேன்

சற்றே மௌனமாய் ’சமுக அந்தஸ்துதான் உறவையும் பாசத்தையும் நிர்ணயக்கிறது’ என்றான்..

’என்னடா என்ன ஆச்சு’ என்றபடி அவனைப் பார்த்தேன்
’விடுடான்னு’ அவன் வேறு எதை எதையோ பேசினான் அதற்கிடையில் எங்களுக்கான உணவைப் பரிமாறிச்சென்றார் பணியாளர்.

நான் மெதுவாக ’வீடு எங்கடா இருக்கு’ என்றேன்
’அவனோ இல்லை மச்சி தனியாத்தான்டா இருக்கேன்’ என்றான்
அப்பா அம்மா இங்க தானே இருக்காங்க அப்புறம் என்னடா என்று சொல்லியபடியே அவனைப்பார்த்தேன்..

என்னை அழமாய் பார்த்தான் சற்று நேர மௌனத்திற்கு பிறகு ’ஒரு கேயை( ஒரினச்சேர்க்கையாளர்) வீடும் சமுகமும் ஒத்துக்குமா” என்று சொல்லியபடி மச்சி அந்த சிக்கனை எடுத்து போடுடான்னு சொன்னான்.

அவ‌னிட‌ம் இந்த‌ வார்த்தையை நான் ச‌ற்றும் எதிர்பார்க்க‌வே இல்லை அப்ப‌டி சொல்வ‌தைவிட‌ அந்த‌ வார்த்தையை என்னால் ஜிர‌ணிக்க‌ முடிய‌வில்லை... அதற்கு பிறகு என்ன பேசுவது என்ற நினைப்பில் மௌனமானேன். அவன் என்னைப்பார்த்த்து சிரித்தபடியே இருந்தான் ..
பில்லை நான் தான் கொடுப்பேன் என்று பணத்தை செலுத்தினான்..உணவு விடுதியை விட்டு கிளம்பினோம். வெக்கை சூழ்ந்த அந்த வீதியில் வழக்கம் போல் அவன் பேசிக்கொண்டே வந்தான். நானோ வார்த்தைகளை தேடிக்கொண்டே இருந்தேன்..


இந்த கதை,உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது

Wednesday, June 3, 2009

உயிப்பித்தலின் வாசனை


உவர்ப்பு சுவையை சுவாசித்த‌ படகின்
ஒவ்வொரு மரக்கட்டையும்
கிளைத்து வளர்ந்த அதன் வேர்களை களைய
துடுப்புடன் நித்தமிட்ட சண்டையில்
அது கலைந்த இலைகளின் பச்சைய வாசனையை
தன் மீதமரும் பறவைகளின் எச்சங்களில்
மீட்டு பரப்புகின்றன அவ்விடமெங்கும்

அலைகளிடம் பேசும் அதன்
நங்கூரமிட்ட கயிற்றின் கதைகளை
கேட்க மனமில்லமால்
தூரத்து கோயில் மணியோசையிடம்
அதன் ரகசியத்தை பகிர்தலில்
நேற்று துடித்தடங்கிய மீன்களின் உயிரோசையை
அலைகளிடம் விடைபெற்ற அதிகாலைப்பொழுதில்
கடைத்தெரு மீனவச்சியின்
வியர்வை வாசனையில் மிதக்க விடுகிறது

ரகசிய வார்த்தைகள் சூழ்ந்த
பின் மாலைப்பொழுது கால் தடங்களிடம்
உயிரற்ற மீன்களின் கண்களில்
படர்ந்த தன் பிம்பத்தின் ரகசியத்தை
சன்னமாய் பகிர்ந்து உயிப்பிக்கிறது
தனது நாட்களை

Tuesday, June 2, 2009

இர‌த்த‌ம் ப‌ச்சைய‌ வாச‌த்துட‌ன்நீண்ட‌ ஒரு மாலைப்பொழுதில்
என் பார்வைக்கு அப்பால்
தோன்றிய அந்த மாநிறப் பெண்
தன் குதிகால் உய‌ர்ந்த‌ செருப்பை
அவ‌ளின் ம‌ல்லிகைப் பூவால் அல‌ங்க‌ரிப்ப‌தை
க‌ட‌ந்து சென்ற‌ காற்றின் வ‌ழியே
என‌க்கு உண்ர்த்தினால்
என‌து கோரைப்ப‌ற்க‌ள் இப்போது
அவ‌ளின் உதிர‌த்தைச் சுவைக்க‌
வ‌ள‌ர‌த்தொட‌ங்கின‌
ம‌ல்லிகையின் வாச‌னை நெருங்க‌ நெருங்க‌
க‌ட்டுக்க‌ட‌ங்கா என‌து பசியால்
அவ‌ள் கழுத்தின் ஓர‌ம்
மெல்லிய‌தாய் ப‌தித்தேன் என‌து ப‌ற‌க‌ளை
அவ‌ளின் இர‌த்த‌ம் ப‌ச்சைய‌ வாச‌த்துட‌ன்
அவ‌ளின் காய்த்துப்போன கைக‌ளால்
என‌து அணுறுப்பை அழித்தி பிடித்தால்
அவ‌ளின் இர‌த்த‌ம் வ‌ற்றிய‌ உட‌லை
க‌வ்விய‌ப‌டி மேலேழுந்து சென்றேன்
அவ‌ளின் மெல்லிய‌ முன‌க‌ல்
என்னை அதிக‌ தூர‌ம் இழுத்து சென்ற‌து
விடிய‌லை நோக்கி ந‌க‌ர்ந்து போது
என‌து தூர‌ம் சுருங்கி என‌து ப‌டுக்கைய‌றையில்
நாய்குட்டியாய் நான்
அவ‌ளோ ப‌டுக்கை விரிப்பை
சுற்றிய‌ப‌டி பூஜைய‌றையில்

Monday, June 1, 2009

கடக்கமுடியா பெருவெளிஎன்னுள் தொலைந்துபோன‌
பாதையில் நீயும் நானும்
வண்ணத்துப்பூச்சியின் நிறங்களாய்

சாத்தப்படும் கதவுகளுக்கு அப்பால்
எப்போதும் மர்மப் புன்னகை ஒலியை
சலிக்காமல் உதிர்க்கிறாய்
நானோ கதவுகள் பொய்யென்று
மௌனமாய் கடக்கிறேன்

நீயோ புன்னகை ஒலியை
நிறங்களாய் மாற்றி கதவுகளை
அலங்கரிக்கிறாய்
நானோ நிறங்களும் பொய்யென்று
கதவுகளையும் கடக்கிறேன்

நீயோ நிற‌ங்க‌ளுக்கு வாச‌னை உண்டென
என‌து நாசித்துவார‌த்தை க‌ட‌க்கிறாய்
நானோ மூச்சும் பொய்யென்று
நிற‌ங்க‌ளை ம‌றுக்கிறேன்

இறுதியில் எதுவும் இல்லையென‌
நீயும் க‌ட‌க்கிறாய்
நானோ க‌ட‌த்த‌லே பொய்யென‌
அதையும் க‌ட‌க்கிறேன்