Tuesday, January 26, 2010

போர்த்தப்பட்ட மஞ்சள் துண்டியில் கோடிகளின் வாசனை

அகிம்சையைப் போதித்து

அனுப்பிவைத்த ஆயுதங்கள்

பிணங்களைப் பரிசளித்தன

புத்தனின் தேசத்திற்கு..


கந்தகநெடி பரவிய

பிணங்களுக்கு அவசரமாய்

பூசப்பட்டது அமைதியின் திரவியம்


சடலங்கள் சிதறிய வெளியெங்கும்

சுற்றிய கழுகுகள் அத்தனைக்கும்

பிரித்தளிக்கப்பட்டன மாயனக் கொல்லைகள்


வரலாற்றை நிறுத்திவைக்க

மாயனக்கொல்லையெங்கும்

பிணங்களைச் சுவைத்தபடி ஓநாயாய்

சுற்றி அலைந்தன ஊடகங்கள்


கல்லறைகள் மறுக்கப்பட்ட

சடலங்கள் கடல் எல்லை தாண்டாமல்

போர்த்தப்பட்ட மஞ்சள் துண்டியில்

கோடிகளின் வாசனை

Friday, January 15, 2010

நானும் காதலிக்க ஆசைப்பட்டேன்


நானும் காதலிக்க ஆசைப்பட்டேன்

கூடவே காதலிக்கப்படவும்

இவர்களைத்தான் காதலிக்க வேண்டும்

வரையறைகள் உடைப்பட்ட எனது காதலை

எப்படி புரியவைப்பது என

காமத்தை கருவியாக்கி

கவனமாய் ஏய்தேன் ஆனால்

எனது சமுக முகமுடியில் விழுந்த

கீறல்களை சிரிப்பாலும் வார்த்தைகளாலும்

லவகமாக தைத்து காதலைப் பதுக்கினேன்

என்னால் காதலிக்கப்படுபவரின்

சிரிப்பொலிக்கான அர்த்தங்களை

பலவாறு அடுக்கிக் கொண்டே செல்கிறேன்

அவனது வார்த்தைகளின்

இயல்பைக்குறித்து முதன்முதலாய் சிந்தித்தேன்

எங்களது மதுக்கடை சந்திப்பின்

இடைவெளியை நாட்காட்டில்

குறித்துக்கொள்ள தொடங்கினேன்.

அவனுக்காக உதிர்த்த வார்த்தைகளை

அசைபோடத் தொடங்கினேன்.

இந்த உறவின் அழுத்தம் தாளமால்

மறுபடியும்

நானும் காதலிக்க ஆசைப்பட்டேன்

கூடவே காதலிக்கப்படவும்