Tuesday, October 27, 2009

நிஜங்களை செரித்தபடி



நேரத்தை ஏமாற்றியபடி

கழிந்த பொழுதுகளை

சுமந்த நாட்களால் நிரம்பி

கொதிக்கிறது மனம்

இரவுகளை எதிர்த்து

சண்டையிட ஆயத்ததுடன்

கடக்கிறேன் எனது வாசலை

தொலைக்காட்சி இறைக்கும்

பிம்பங்களுக்குள் கரைந்து

எனது பிம்பத்தை ஸ்தாபிக்க

அலறும் எனது குரல் மெளனமாய் கடக்கிறது

நிஜங்களை செரித்தபடி

Tuesday, October 20, 2009

தொடர்பவனாய்



ஏதொ தொடர்பால்
தொடர்பறுந்த வாழ்க்கையை
தொடரமால் தொட்டுச்செல்கிறது
கிழித்து எறியப்பட்ட தேதித்தாள்

கருவறைக்கும் எனக்குமான தொடர்பே
தொடர்பின் உச்சமாய் இன்னொரு
கருவறையை நிரப்புகிறேன்

என் கையில் த‌வ‌ழும் சிசுவின்
க‌ருவ‌றை வாசனை
மீட்டுச்செல்கிற‌து என‌து
தொட‌ர்ப‌றுந்த‌ வீணையை

தொடர்புகள் மட்டுமே
முடிவின் முகமாய்

முடிவின் நிட்சியாய்
புதுப்புது தொடர்புகள்
பூத்துக்கொண்டே வாடுகிறது
இருப்பினும்
தொடர்ந்து செல்கிறேன்
தொடர்பவனாய்

Friday, July 24, 2009

சிதைவின் குரல்



பெரும்பிரலள‌யம் என்னுள்
நாளைக்கான பிம்பங்கள்
விடாமல் துரத்துகின்றன‌
வெகுதுராம் வந்துவிட்டேன்
கடப்பதற்கான பாதைகள்
அத்தனையும் ஒவ்வொன்றாய்
சிதைத்துக்கொண்டு

சிதைவுகளையும் சேர்ந்தே
சுமந்துகொண்டு எனக்கான‌
ஆணியை ஏந்தியபடி
சிலுவையில் ஏறி
பெருங்குரலேடுத்து கத்துகிறேன்

எனது செவிச்சிறைக்குள்
இத்தனை நாள் புகாத‌
அத்தனைகுரல்களும் அந்தப்பெருங்குரலில்
மோதித்தெறிக்கின்றன…

வெறுமை நிறைந்த அந்த வெளியில்
எனது ஒற்றைக்குரல் மட்டும்
காற்றின் போக்கை மறுதலித்து
ஓங்கி அழைக்கிறது என்னை
சிலுவையில் அறையப்போகிறவனை

Thursday, July 23, 2009

பதில்களே போதும் என‌



பதில்களுக்கான கேள்விகள்
எழும் போது
எனக்கான அடையாளத்தை
கேள்விக்குள் பதுக்கி
தூக்கி எறிகிறேன்
அடையாளத்தின் ஆடைகளை

அம்மணமாய் பார்க்கும் போது
அவசரமாய் ஆடைகள் தேடி
அடையாளத்தை துறக்கிறேன்

இருளில் உலாவும்
ஆடைகளோ மோதித்தெறித்து
பெருங்குரலேடுத்து கத்துகின்றன‌
பதில்களே போதும் என‌

பதில்களோ மௌனச்சிரிப்புடன்
தனதாக்கிக் கொள்கிறது
எனக்கான ஆடைகளை

Wednesday, July 15, 2009

பதினென் பருவங்களின் பேய்கள்



இரவு முழுவதும்
சூழ்ந்த பிணவாடையில்
எனது கனவில் வந்த பேய்கூட
முகம் சிதைந்த நிலையில்

அம்மா சொன்ன மோகினிக்கதை
மோகினியை பார்க்க விரும்பிய
பதினென் பருவங்களின் பேய்கள்
ஏனோ இப்போது வருவதேயில்லை

அய்யனார் கோயில் பூசாரியோ
தனது உடுக்கையை நித்தம் தடவி
குதிரைக்கனவில் பேய்களை தேடி அலைகிறார்

அய்யனோரோ மண் குதிரை
புடைசூழ வெறித்துப்பார்கிறார்
ஆள் வருகையற்ற வீதிகளை

Friday, July 10, 2009

அவள் உதடுகள் விடாமல் துடிக்கிறது



குண்டென பரிசோதிக்கப்பட்ட
அவளின் மார்பகத்தில்
பால் சுரப்பை விடாது தேடுகிறது
முகம் சிதைந்த குழந்தை

அதன் வீறிடும் சபததில்
அவளின் கண்ணீர் உதிர்க்கும்
கதைகளை கதைக்க
அவள் உதடுகள் விடாமல் துடிக்கிறது

தன் உடலின் மேல் எழுதப்பட்ட
அத்தனை கதைகளையும்
தன்னுள் கதைத்து தொடர்ந்து ஓடுகிறாள்
காகம் கருகிக்கிடக்கும்
முட்கம்பிகள் வரை

முட்கம்பிகளின் தூரே தெரியும்
மஞ்சள் கறை படிந்த குளக்கரையை
நோக்கி அத்தனை ஆடைகளை
களைந்து அம்மணமாய் நிற்கிறாள்
அத்தனை அரசியலையும்
தன்னுள் சுமந்து

Thursday, July 9, 2009

மலம் கழிக்கஇரவை நோக்கிகாத்திருந்தேன்




குவிக்கப்பட்ட பிணங்களின்
மத்தியில் பிரிக்கப்பட்டன
உனக்கான தேசமும் எனக்கான மானமும்

முட்கம்பிகளின் தூரே தெரியும்
ஒற்றைப்பனை நோக்கிய
எனது பயணத்தை நாள் தோறும்
ஒத்திகை பார்க்கிறேன்

அரசியல் தீர்வு என்று
அலரும் எனது வானொலி சப்தம்
துடித்தலரும் சிறுமியின் குரலில்
கதறி அணைந்தது

துர்நாற்றம் வீசும் வீதிகளில்
எனக்கான பேரத்தை யார் யாரோ
பேசுகையில் நான் மலம் கழிக்க

இரவை நோக்கி காத்திருந்தேன்