Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, January 26, 2010

போர்த்தப்பட்ட மஞ்சள் துண்டியில் கோடிகளின் வாசனை

அகிம்சையைப் போதித்து

அனுப்பிவைத்த ஆயுதங்கள்

பிணங்களைப் பரிசளித்தன

புத்தனின் தேசத்திற்கு..


கந்தகநெடி பரவிய

பிணங்களுக்கு அவசரமாய்

பூசப்பட்டது அமைதியின் திரவியம்


சடலங்கள் சிதறிய வெளியெங்கும்

சுற்றிய கழுகுகள் அத்தனைக்கும்

பிரித்தளிக்கப்பட்டன மாயனக் கொல்லைகள்


வரலாற்றை நிறுத்திவைக்க

மாயனக்கொல்லையெங்கும்

பிணங்களைச் சுவைத்தபடி ஓநாயாய்

சுற்றி அலைந்தன ஊடகங்கள்


கல்லறைகள் மறுக்கப்பட்ட

சடலங்கள் கடல் எல்லை தாண்டாமல்

போர்த்தப்பட்ட மஞ்சள் துண்டியில்

கோடிகளின் வாசனை

Friday, July 24, 2009

சிதைவின் குரல்



பெரும்பிரலள‌யம் என்னுள்
நாளைக்கான பிம்பங்கள்
விடாமல் துரத்துகின்றன‌
வெகுதுராம் வந்துவிட்டேன்
கடப்பதற்கான பாதைகள்
அத்தனையும் ஒவ்வொன்றாய்
சிதைத்துக்கொண்டு

சிதைவுகளையும் சேர்ந்தே
சுமந்துகொண்டு எனக்கான‌
ஆணியை ஏந்தியபடி
சிலுவையில் ஏறி
பெருங்குரலேடுத்து கத்துகிறேன்

எனது செவிச்சிறைக்குள்
இத்தனை நாள் புகாத‌
அத்தனைகுரல்களும் அந்தப்பெருங்குரலில்
மோதித்தெறிக்கின்றன…

வெறுமை நிறைந்த அந்த வெளியில்
எனது ஒற்றைக்குரல் மட்டும்
காற்றின் போக்கை மறுதலித்து
ஓங்கி அழைக்கிறது என்னை
சிலுவையில் அறையப்போகிறவனை

Thursday, July 23, 2009

பதில்களே போதும் என‌



பதில்களுக்கான கேள்விகள்
எழும் போது
எனக்கான அடையாளத்தை
கேள்விக்குள் பதுக்கி
தூக்கி எறிகிறேன்
அடையாளத்தின் ஆடைகளை

அம்மணமாய் பார்க்கும் போது
அவசரமாய் ஆடைகள் தேடி
அடையாளத்தை துறக்கிறேன்

இருளில் உலாவும்
ஆடைகளோ மோதித்தெறித்து
பெருங்குரலேடுத்து கத்துகின்றன‌
பதில்களே போதும் என‌

பதில்களோ மௌனச்சிரிப்புடன்
தனதாக்கிக் கொள்கிறது
எனக்கான ஆடைகளை

Wednesday, July 15, 2009

பதினென் பருவங்களின் பேய்கள்



இரவு முழுவதும்
சூழ்ந்த பிணவாடையில்
எனது கனவில் வந்த பேய்கூட
முகம் சிதைந்த நிலையில்

அம்மா சொன்ன மோகினிக்கதை
மோகினியை பார்க்க விரும்பிய
பதினென் பருவங்களின் பேய்கள்
ஏனோ இப்போது வருவதேயில்லை

அய்யனார் கோயில் பூசாரியோ
தனது உடுக்கையை நித்தம் தடவி
குதிரைக்கனவில் பேய்களை தேடி அலைகிறார்

அய்யனோரோ மண் குதிரை
புடைசூழ வெறித்துப்பார்கிறார்
ஆள் வருகையற்ற வீதிகளை

Friday, July 10, 2009

அவள் உதடுகள் விடாமல் துடிக்கிறது



குண்டென பரிசோதிக்கப்பட்ட
அவளின் மார்பகத்தில்
பால் சுரப்பை விடாது தேடுகிறது
முகம் சிதைந்த குழந்தை

அதன் வீறிடும் சபததில்
அவளின் கண்ணீர் உதிர்க்கும்
கதைகளை கதைக்க
அவள் உதடுகள் விடாமல் துடிக்கிறது

தன் உடலின் மேல் எழுதப்பட்ட
அத்தனை கதைகளையும்
தன்னுள் கதைத்து தொடர்ந்து ஓடுகிறாள்
காகம் கருகிக்கிடக்கும்
முட்கம்பிகள் வரை

முட்கம்பிகளின் தூரே தெரியும்
மஞ்சள் கறை படிந்த குளக்கரையை
நோக்கி அத்தனை ஆடைகளை
களைந்து அம்மணமாய் நிற்கிறாள்
அத்தனை அரசியலையும்
தன்னுள் சுமந்து

Thursday, July 9, 2009

மலம் கழிக்கஇரவை நோக்கிகாத்திருந்தேன்




குவிக்கப்பட்ட பிணங்களின்
மத்தியில் பிரிக்கப்பட்டன
உனக்கான தேசமும் எனக்கான மானமும்

முட்கம்பிகளின் தூரே தெரியும்
ஒற்றைப்பனை நோக்கிய
எனது பயணத்தை நாள் தோறும்
ஒத்திகை பார்க்கிறேன்

அரசியல் தீர்வு என்று
அலரும் எனது வானொலி சப்தம்
துடித்தலரும் சிறுமியின் குரலில்
கதறி அணைந்தது

துர்நாற்றம் வீசும் வீதிகளில்
எனக்கான பேரத்தை யார் யாரோ
பேசுகையில் நான் மலம் கழிக்க

இரவை நோக்கி காத்திருந்தேன்

Tuesday, July 7, 2009

புத்தனின் இரத்தம்

கந்தக நெடி கமழும்
புதத விஹாரில் ஏலம் விடப்பட்ட
புத்தனை எத்தனை கோடிக்கு
எடுப்பதன பலத்த போட்டி

நான் புத்தனில்லை என்று
கதறிய புத்தனின் வார்த்தைகள்
முகம் சிதைந்த குழந்தையின்
கதறில் கலைந்து அதிர்ந்து
கண்ணாடி பேழைக்குள்

இறுதியில் பிணக்குவியலின்
அளவு நிர்யணிகப்பட்ட ஏலத்தில்
காந்தியின் அவுக்கப்பட்ட கோவணம்
பெருமிதமாய் பரப்பியது முடை நாற்றத்தை

பேரழிவு தந்த வாய்ப்புகளை
சுவைக்க சுற்றி அலையும் ஒநாய்கள்
நட்சத்திர விடுதியில் அருந்திய மதுவில்
முடைநாற்றமுடன் பரிமாறப்பட்டது
புத்தனின் இரத்தம்

Friday, July 3, 2009

அம்மணக்காந்தியை ஆயிரம் கோடிக்கு

எனது தடத்தில் படிந்த
குருதிக்கறையை கழுவ
நீண்ட வரிசையில் நான்

பற்களில் படிந்த இரத்தக்கறையை
கழுவ என் முன்னால் நின்ற காந்தி
தன் கோவணத்தை தேடியபடியே
தன் தடியை தவறவிட்டார்

கந்தக நெடி பரவிய விழிகளுடன்
பிணவாடை சுமந்த புத்தனோ
தன் சாம்பல் குவியலை காந்தியின்
கோவணத்தில் கவனமாய் மறைத்தார்

காந்தியின் தடியை களவாடிய
ஊடகங்களோ ஒளிபரப்பின
அம்மணக்காந்தியை ஆயிரம் கோடிக்கு...

Wednesday, June 3, 2009

உயிப்பித்தலின் வாசனை


உவர்ப்பு சுவையை சுவாசித்த‌ படகின்
ஒவ்வொரு மரக்கட்டையும்
கிளைத்து வளர்ந்த அதன் வேர்களை களைய
துடுப்புடன் நித்தமிட்ட சண்டையில்
அது கலைந்த இலைகளின் பச்சைய வாசனையை
தன் மீதமரும் பறவைகளின் எச்சங்களில்
மீட்டு பரப்புகின்றன அவ்விடமெங்கும்

அலைகளிடம் பேசும் அதன்
நங்கூரமிட்ட கயிற்றின் கதைகளை
கேட்க மனமில்லமால்
தூரத்து கோயில் மணியோசையிடம்
அதன் ரகசியத்தை பகிர்தலில்
நேற்று துடித்தடங்கிய மீன்களின் உயிரோசையை
அலைகளிடம் விடைபெற்ற அதிகாலைப்பொழுதில்
கடைத்தெரு மீனவச்சியின்
வியர்வை வாசனையில் மிதக்க விடுகிறது

ரகசிய வார்த்தைகள் சூழ்ந்த
பின் மாலைப்பொழுது கால் தடங்களிடம்
உயிரற்ற மீன்களின் கண்களில்
படர்ந்த தன் பிம்பத்தின் ரகசியத்தை
சன்னமாய் பகிர்ந்து உயிப்பிக்கிறது
தனது நாட்களை

Monday, June 1, 2009

கடக்கமுடியா பெருவெளி



என்னுள் தொலைந்துபோன‌
பாதையில் நீயும் நானும்
வண்ணத்துப்பூச்சியின் நிறங்களாய்

சாத்தப்படும் கதவுகளுக்கு அப்பால்
எப்போதும் மர்மப் புன்னகை ஒலியை
சலிக்காமல் உதிர்க்கிறாய்
நானோ கதவுகள் பொய்யென்று
மௌனமாய் கடக்கிறேன்

நீயோ புன்னகை ஒலியை
நிறங்களாய் மாற்றி கதவுகளை
அலங்கரிக்கிறாய்
நானோ நிறங்களும் பொய்யென்று
கதவுகளையும் கடக்கிறேன்

நீயோ நிற‌ங்க‌ளுக்கு வாச‌னை உண்டென
என‌து நாசித்துவார‌த்தை க‌ட‌க்கிறாய்
நானோ மூச்சும் பொய்யென்று
நிற‌ங்க‌ளை ம‌றுக்கிறேன்

இறுதியில் எதுவும் இல்லையென‌
நீயும் க‌ட‌க்கிறாய்
நானோ க‌ட‌த்த‌லே பொய்யென‌
அதையும் க‌ட‌க்கிறேன்