Friday, May 29, 2009

சாத்தியமற்றதைக் கோருங்கள்

இந்தக்கட்டுரையின் ஆசிரியர் லென் ப்ராக்கென் அமெரிக்க அரசவிழ்ப்பாளர் (anarchist). அரசவிழ்ப்பாளர்களை அராஜகவாதிகள் என்று எழுதும் வழக்கமே தமிழில் இன்றும் இருந்து வருகிறது. இச்சொல்லே அவர்களை மோசமானவர்கள் என்று சித்தரிப்பது. இதற்கு மாற்றாக அரசவிழ்ப்பாளர்கள் என்ற பதத்தை உருவாக்கிய சிறப்பு அ. மார்க்சிற்கு. (உறவு முறிந்துவிட்டால் மற்றவர்களை, அவர்களது பங்களிப்புகளை முற்றிலுமாக நிராகரிக்கும் இழிவான செயலை ஒருபோதும் செய்ததில்லை).கட்டுரையில் Extranational என்றிருப்பதை International என்பதற்கு மாற்றாக பொருத்தி யோசிக்க வேண்டுகிறேன். கம்யூனிஸ்டுகள் வழக்கமாக International - களைத் தொடங்குவார்கள். இவர் அரசவிழ்ப்பாளர் என்பதால் Extranational ஐத் துவங்கியிருக்கிறார்

மார்க்சியர்கள் உழைப்பைக் கண்மூடித்தனமாகப் போற்றுபவர்கள். மனிதனின் சாரம் உழைப்பு என்றும் வாதிடுவார்கள். மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானது உழைப்பினால்தான் என்பார்கள்.இதற்கு மாற்றான அரசவிழ்ப்பாளர்களின் கருத்தமைவே "உழைப்பை ஒழிப்பது". மனிதனின் உருவாக்கத்தில் விளையாட்டின் பங்கை பல மானுடவியலாளர்களின் ஆராய்ச்சிகள் இன்று நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. உழைப்புச் செயல்பாடு என்று சொல்லத்தக்கதே பல பழங்குடி இனத்தவர்களிடையே ஒரு விளையாட்டைப் போல நிகழ்த்தப்படுவதை அவர்கள் காட்டியிருக்கிறார்கள். இது தொடர்பாக விரிவாக எழுத எப்போது நேரம் வாய்க்கப்போகிறதோ தெரியவில்லை.

நானும் பாப் ப்ளாக்கும் சேர்ந்து 1994 பிப்ரவரியில் Extranational - ஐத் துவங்கியபோது, வெள்ளை மாளிகையிலிருந்து ஆரம்பித்து நாடு முழுக்கப் பரவியிருந்த பிற்போக்குக் கும்பல்களுக்கு எங்களுடைய தொழிலாளர் சார்பற்ற தேசிய எதிர்ப்பு நிலையை விளக்குவதற்காக "தேசங்களும் இல்லை, உழைக்கவும் தேவையில்லை" (No Nation, No Work) என்ற முழக்கத்தை நான் வைக்க நேர்ந்தது. இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் அப்போது மிகவும் அபத்தமாகத் தோன்றிய இந்தக் கருத்துக்கள் இப்போது பரவலான செல்வாக்கைப் பெற்று வருகின்றன.தேசியம் சுருண்டு விழுந்து சாவை நோக்கிச் சென்று கொண்டிருப்பது போன்ற நிலைமை இன்னும் வந்துவிடவில்லைதான். என்றாலும், முன்னாள் யுகோஸ்லோவியாவிலும் இன்னும் பல்வேறு இடங்களிலும் தேசிய முரண்பாடுகள் அரங்கேறும் விதங்களைப் பார்க்கும்போது அது அதன் கடைசிப் புகலிடங்களை நோக்கி ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறது என்று கருத இடமுண்டு. இதற்கு சாட்சியம் சொல்வது போல தேசிய வானொலியேகூட அரசுத் தூதர்களையும் இன்னும் மற்ற தேவையில்லாத சின்னங்களையும் வைத்துக் கொண்டு காலம் தள்ளிக்கொண்டு இருக்கும் தேசிய - அரசுகள் காலாவதியாகிவிட்டது குறித்து ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது

தேசியம் என்கிற சொறிபிடித்த நாயை அடுத்த நூற்றாண்டில் நாம் சவக்குழிக்கு அனுப்பிவிடும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஏராளமான மக்கள், ஒரு சர்வதேசிய ஒழுக்கவியலை, முற்றிலும் அந்நியர்களான நபர்களிடத்தில் மட்டுமே நம்மை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்ற அளவுக்கு நாம் ஒவ்வொருவரும் நமக்கே அந்நியர்களாகி விட்டிருக்கிறோம் என்பதை அங்கீகரிக்கும் ஒரு ஒழுக்கவியலை ஏற்கனவே தழுவிக்கொண்டு விட்டிருக்கிறார்கள். இதில் உண்மையான சோதனை, தேசியத்தின் எந்தவிதமான வெளிப்பாட்டிற்கு எதிராகவும், பாசிசத் தலையை எங்கெல்லாம் அது நீட்டுகிறதோ அங்கெல்லாம் தலையிட்டு அதற்கெதிராகப் போராடுவதில்தான் இருக்கிறது

ஜெரமி ரிஃகின்ஸின் "வேலையின் மரணம்" என்ற அரைகுறையான பிரகடனத்தின் விளைவாக, நாட்டின் பொருளாதாரம் வழங்க வைத்திருக்கிற எல்லாப் பண்டங்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்குப் போதுமான நுகர்வோர் இல்லை என்ற அளவுக்கு ஒவ்வொரு துறையிலும் அவசியமான வேலைகள் இல்லை என்ற ரகசியம் நாடாளுமன்றச் சிற்றுண்டிச் சாலையின் மேசைகளுக்குப் பரவியிருக்கிறது. உலகம் முழுக்க 900 கோடி மக்கள் வேலையற்றோர் வரிசையில் நின்றுகொண்டிருக்க, இந்தப் பெரும் நிறுவனப் பொருளாதாரம் தூக்கி எறியப்பட வேண்டிய ஒரு சர்வாதிகார அமைப்பு என்ற உண்மை மேலும் மேலும் அதிகமான மக்கட் பிரிவினருக்கு பட்டவர்த்தனமாகிக் கொண்டிருக்கிறது.வாரத்தில் 30 மணி நேர உழைப்பு என்று ரிஃப்கின்ஸின் விடுத்த தொலைநோக்கற்ற அறைகூவலையும் மீறி, வேலையின் மதிப்பு மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் வழியாக எங்கும் பரவியிருக்கிற சந்தைப் பொருளாதாரம் இவற்றைக் கேள்விக்குள்ளாக்குவதில் அவர் செலுத்திய அசுரத்தனமான உழைப்பிற்கு நாம் உரிய மரியாதையைத் தந்துதான் ஆக வேண்டும். இந்தப் பொருளாதாரக் கட்டமைப்பிலிருந்து வருடாவருடம் விலக்கி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற பல கோடி மக்களுக்கு வரும் காலங்கள் மிகவும் மோசமானதாகவே இருக்கும் என்றாலும், மற்ற எல்லா சமூக இயக்கங்களைக் காட்டிலும் வேலை - மறுப்பு இயக்கம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை மட்டும் மறுத்துவிட முடியாது.

அப்புறம், இந்த "தேசியமும் இல்லை, உழைக்கவும் தேவையில்லை" என்ற முழக்கம் செல்வாக்குப் பெற்றுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், என்னுடைய முதல் ஆரவாரப் பிரகடனமான City of Death - லும், அடுத்து எனது நாவல் The West is Red - லும் முன்வைத்த கோரிக்கைகளை தொடர்ந்து பரிசீலித்து மாற்றியமைத்து வைப்பதன் மூலம் மாறும் காலச் சூழல்களுக்கேற்ப நானும் என்னைத் தகவமைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்

இதோ, சமீபத்திய எனது கோரிக்கைகள்:
1. தேசிய, இனவாத, பாலியல் ரீதியிலான இன்னும் மற்ற அனைத்து வடிவிலான குறுகிய வெறித்தனங்களும் ஒழிக்கப்பட வேண்டும்.

2. அவசியமற்ற வெள்ளைக்காலர் வேலைகள் ஒழிக்கப்பட்டு வாரத்திற்கு 10 மணி நேர வேலை அமுலாக்கப்பட வேண்டும்.

3. பணக்காரர்களின் ஜனநாயக விரோத ரகசியத்தன்மை ஒழிக்கப்பட்டு செல்வம் சேர்ப்பதின் மீது கட்டுப்பாடு கொண்டுவரப்பட வேண்டும்.

4. பங்குச் சந்தையின் ஒட்டுண்ணித்தனமான பங்குதாரர் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. எல்லா இடத்திலும் எல்லாக் கடன்களையும் ரத்து செய்து, முழுக்க முழுக்க வட்டியில்லாத கூட்டுறவு வங்கி முறை நிறுவப்பட வேண்டும்.

6. இராணுவத்திற்கான செலவுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு திருப்பிவிடப்பட வேண்டும். இராணுவத்தினருக்கான சிறப்புச் சலுகைக் கடைகள் மற்றும் பிற அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.

7. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் மற்றும் வெளியீட்டகங்கள் அனைத்தும் மக்கள் கவுன்சில்களின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

8. உளவுத்துறை, விண்வெளித்துறை போன்ற அவசியமற்ற துறைகள், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்.

9. அரசியல் கைதிகள் மற்றும் சமூக ஒப்புதல் பெற்ற குற்றங்களுக்காக (consensual crimes) - உதாரணத்திற்கு, கொக்கோ வைனைக் குடிப்பது - கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

10. இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து செயலாற்றுபவர்கள் மீது எந்தவிதமான ஒடுக்குமுறையும் தொடுக்கப்படமாட்டாது என்ற உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும்.